தாராபுரம் பகுதியில் ஒவ்வாமை நோய்க்கு ஆயிரக்கணக்கான கறிக் கோழிகள் சாவு: பண்ணையாளர்கள் கவலை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒவ்வாமை நோய்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒவ்வாமை நோய் (அலர்ஜி) தாக்கி ஆயிரக்கணக்கான கறிக்கோழிகள் இறந்து வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குறைவாக மழை பெய்வதாலும் கோழி வளர்புக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதாலும் தாராபுரம் பகுதி விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு கோழிப் பண்ணைகளைத் துவங்கினர். முதலில் சிறிய அளவில் துவங்கப்பட்ட கோழிப் பண்ணைகள் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. 
தாராபுரம் பகுதியில் தற்போது சிறியதும், பெரியதுமாக 100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் முழு வளர்ச்சி அடைந்த நிலையில் 4 லட்சம் கறிக் கோழிகள் விற்பனைக்குத் தயாராகி வருகின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கோழிப் பண்ணைகள் தொடங்கப்பட்டிருந்தாலும் கறிக் கோழிகளின் தேவை அதிகரித்ததால் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் கறிக்கோழிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பிறந்த 11ஆவது நாளில் கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு அவற்றுக்குத் தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்கப்படும். சராசரியாக 5ஆவது வாரம் துவங்கி 7ஆவது வாரத்தில் கோழியின் எடை அரை கிலோ முதல் முக்கால் கிலோ வரை அதிகரிக்கும். 7ஆவது வாரத்தில் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்து (சுமார் 2.25 கிலோ) விற்பனைக்குத் தயாராகின்றன.
கடந்த சில மாதங்களாக கறிக்கோழிகளை 6ஆவது அல்லது 7ஆவது வாரத்தில் ஒவ்வாமை நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கியதும் கோழிகளுக்கு சளி பிடித்து காய்ச்சல் ஏற்படும். இதனால் கோழிகள் ருசித்தன்மையை இழந்து குறைந்த அளவிலேயே தீவனம் உட்கொள்ளும். தொடர்ந்து நுரையீரலை நோய் தாக்கியதும் இறப்பு ஏற்படுகிறது. இறப்பில் இருந்து தப்பிக்கும் கோழிகளின் எடை சராசரியில் இருந்து 500 கிராம் வரை குறைகிறது.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், நோய் தாக்குதலால் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன. ஒவ்வாமை நோய் தடுப்பு மருந்து 100 மில்லி ரூ.210 வரை விற்பனையாகிறது. இது உற்பத்திச் செலவை விட அதிகமாகிறது. அதையும் மீறி செலவு செய்தால் பேரிழப்பு ஏற்படுகிறது. 
கறிக் கோழிகளின் சந்தை நிலவரம் நிலையற்று இருப்பதால் சிறு பண்ணையாளர்களால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக பனிக் காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும். பண்ணைகளை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் கோழிகள் காப்பாற்றப்படுவதுடன், பிற கோழிகளுக்கு நோய் பரவுவதை தடுக்கலாம் என்றனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: தாராபுரம் பகுதியில் சகுனிபாளையம், வெங்கிட்டிபாளையம், மடத்துப்பாளையம் பகுதி பண்ணைகளில் நோய் தாக்கி தினசரி ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழக்கின்றன. இதனை பண்ணை உரிமையாளர்கள் புதைக்காமல் அப்படியே சாலையோரம் வீசிச் செல்கின்றனர். இதனை உண்ண வரும் வெறிநாய்களும், மர்ம விலங்குகளும் அருகில் உள்ள பட்டியில் புகுந்து ஆடு, கோழி, மாடுகளைத் தாக்கி கொல்கின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இறந்த கோழிகள் விற்பனை:  அதிகாரிகள் எச்சரிக்கை
ஒவ்வாமை நோய் தாக்கி உயிரிழந்த கோழிகளை குறைந்த விலைக்குப்  பண்ணை உரிமையாளர்கள் இறைச்சிக் கடைகளில் விற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதனைக் கண்டறிந்தால்  கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாராபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) முதல் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். நோய் தாக்கி இறந்த கோழிக் கறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com