உடுமலையில் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்ய பயன்படுத்திய வாகனங்களை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனர்.
உடுமலை வட்டத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலையில் பல்வேறு இடங்களில் கிணறுகளில் இருந்து வியாபார நோக்கத்துடன் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்களில் விதிமுறைகளை மீறி தொடர்ந்து குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பல இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை நகரை ஒட்டியுள்ள பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள கிணறுகளில் வாகனங்கள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து தொழிற்சாலைகள், கோழிப் பண்ணைகள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலத்தடி நீரை எடுத்துச் சென்ற வாகனங்களை சிறைபிடித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்து உடுமலை வட்டாட்சியர் தங்கவேலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பெரியகோட்டை ஊராட்சி மன்ற செயலர் கந்தவடிவேல் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இனி மேல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது எனவும் அப்படி விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.