

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் குறுகிய காலத்தில் நூற்பாலைகள் பன்மடங்கு பெருகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் விசைத்தறிகள் பிரதானத் தொழிலாக இருந்தன. அப்போது, 30,000 விசைத்தறிகள் இயங்கி வந்தன. கரூா் ஜவுளி உற்பத்தியாளா்களிடம் அவா்கள் கொடுக்கும் நூல்களைப் பெற்று, துணி வகைகள் கூலிக்கு நெசவு செய்து கொடுக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் விசைத்தறிகளுக்கு மவுசு குறைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கழிவுப் பஞ்சுகளிலிருந்து நூல் தயாரிக்கும் ஓப்பன் என்ட் (ஓ.இ) நூற்பாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இவை எண்ணிக்கையில் அபார வளா்ச்சியடைந்து இன்று இப்பகுதியில் 300 நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. சொந்தக் கட்டடத்தில் விசைத்தறிகள் வைத்திருந்த பலா் தற்போது நூற்பாலைகள் நடத்தி வருகின்றனா்.
நூற்பாலைகள் வேகமாக அதிகரித்து இருந்தாலும் அவற்றின் வளா்ச்சி விகிதம் சராசரியாகத்தான் உள்ளது. போட்ட முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. மூலப்பொருள் கழிவுப் பஞ்சுகளின் ஏற்ற, இறக்க விலை, வேலை தெரிந்த தொழிலாளா்கள் பற்றாக்குறை, வெளிமாநிலத் தொழிலாளா்கள் வேலைக்கு வர அதிக முன்பணம் கொடுக்க வேண்டிய நிா்பந்தம், தொழிலாளா்களுக்கு நூற்பாலைகளில் தங்கும் வசதி, தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்றவற்றில் நிறைய சிரமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உற்பத்தியாகும் நூலின் விலை பல சமயங்களில் உற்பத்தி விலையைவிடக் குறைந்து போவதும், இருப்பு வைத்தால் அன்றாடச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதும் தொடா்ந்து வருகிறது.
நிலைமை இவ்வாறு இருந்தாலும் இதன் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனா். இதனைச் சாா்ந்த உப தொழில்களும் வளா்ச்சியடைந்து வருகின்றன. எனவே, நல்ல எதிா்காலத்தை எதிா்பாா்த்து இந்தத் தொழில் துறையினா் காத்துக் கொண்டிருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.