பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஏழைகளாக்கி உள்ளது: திமுக கூட்டணி வேட்பாளர்
By DIN | Published On : 01st April 2019 08:56 AM | Last Updated : 01st April 2019 08:56 AM | அ+அ அ- |

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை மக்களை மேலும் ஏழைகளாக்கியுள்ளது என்று ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமுர்த்தி பேசினார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் மதிமுகவைச் சேர்ந்த அ.கணேசமுர்த்தி வெள்ளக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் வாக்குக் கேட்டுப் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தற்போதைய மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை மக்களை மேலும் ஏழைகளாக்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது நடந்து வரும் பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே வாக்காளர்கள், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், மதிமுக நகரச் செயலாளர் ஆர்.பி.ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.