மின் மயான பணியைத் தொடர வலியுறுத்தி பல்லடத்தில் முழு கடையடைப்புப் போராட்டம்
By DIN | Published On : 12th April 2019 08:33 AM | Last Updated : 12th April 2019 08:33 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே மின் மயானம் அமைக்கும் பணியை தொடர வலியுறுத்தி முழு கடையடைப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பணிக்கம்பட்டி ஊராட்சி வெங்கிட்டாபுரம் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் ரூ. 3கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணியை பல்லடம் ரோட்டரி சங்கத்தின் மின் மயான அறக்கட்டளை, பொதுமக்களின் பங்களிப்போடு செய்து வந்தது.
இந்த நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டட அனுமதி வழங்காமல் பணியை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருந்தது.
இதைக் கண்டித்தும், மின் மயானப் பணியை உடனடியாக துவங்க வலியுறுத்தியும் பல்லடம் வட்ட வியாபாரிகள் சங்கம், மின் மயான அமைப்புக் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் வியாழக்கிழமை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பல்லடத்தில் அனைத்து சாலைகளிலும் உள்ள சிறு கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்து கடைகளும் வியாழக்கிழமை அடைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை பல்லடம் - தாராபுரம் சாலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்கியதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த குண்டடத்தைச் சேர்ந்த கனகமணி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்தில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.