கடலில் கலக்கும் உபரி நீர் மத்திய அரசுக்கு சொந்தம் என சட்டம் இயற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

இந்தியாவில் கடலில் கலக்கும் உபரி நீர் மத்திய அரசுக்குச் சொந்தம் என்று சட்டம் இயற்றினால், நாட்டில் நீர்
Updated on
1 min read

இந்தியாவில் கடலில் கலக்கும் உபரி நீர் மத்திய அரசுக்குச் சொந்தம் என்று சட்டம் இயற்றினால், நாட்டில் நீர் பற்றாக்குறை இருக்காது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
ஒரு மாநில அரசு தனது தேவைக்கு எவ்வளவு நீரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் தேவை போக மீதம் இருக்கும் நீரைக் கடலில் வடிக்க அந்த மாநிலத்துக்கு உரிமை இல்லை. கடலில் கலக்கும் உபரி நீர் மத்திய அரசுக்குச் சொந்தம்.
இதை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றி நடைமுறைப்படுத்தும்போது, மாநிலங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதனால், இந்திய நாட்டின் ஒருமைப்பாடும் வலுப்பெறும். உலகின் சராசரி மழைப் பொழிவு 950 மில்லி மீட்டர் ஆகும். இந்தியாவின் சராசரி மழைப் பொழிவு 1,250 மில்லி மீட்டர். ஆண்டுதோறும் இந்தியாவில் கிடைக்கும் நீர் வளம் என்பது 70 ஆயிரம் டிஎம்சி. இதில் 20 ஆயிரம் டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரம் டிஎம்சி கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இதில் வீணாகும் உபரி நீரை பக்கத்து மாநிலங்களுக்குக் கொடுக்க முன் வருவதில்லை. இதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றியபோது, ஆறுகள் மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மாறாக மாநில அரசுகளின் பட்டியலில் வைத்தது தான் பிரச்னைக்கு காரணம்.
இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் மட்டுமே நீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை உள்ளது. மற்ற பெரும்பான்மை மாநிலங்கள் கொடுக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. எனவே, பழைய சட்டத்தைத் திருத்த வாய்ப்பில்லை.
ஆகவே, கடலில் வீணாக கலக்கும் உபரிநீர் மத்திய அரசுக்குச் சொந்தம் புதிய சட்டம் இயற்ற வேண்டும். உபரிநீரை பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு திருப்பிவிட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com