பொதுப் பணித் துறை அலுவலகத்தை சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது
By DIN | Published On : 26th April 2019 07:43 AM | Last Updated : 26th April 2019 07:43 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த குண்டடம் அருகே உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தை சேதப்படுத்திய வழக்கில் 2 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம், உப்பாறு அணை சாலையில் பொதுப் பணித் துறை அலுவலகம் உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு அந்த அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அலுவலகத்தின் முகப்பில் உள்ள இரும்பு கிரில் கதவை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், அலுவலக குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குண்டடம் அடுத்துள்ள ருத்ராவதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (35), தம்மரெட்டிபாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி (24) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.