காங்கயத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்: கார்கள் சேதம்: கொங்கு மக்கள் முன்னணியினர் மறியல்
By DIN | Published On : 04th August 2019 05:13 AM | Last Updated : 04th August 2019 05:13 AM | அ+அ அ- |

காங்கயத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு ஆதரவாளர்கள் கார்களை அடித்து சேதப்படுத்தியதாகக் கூறி கொங்கு மக்கள் முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடம் உள்ளது. அவரது நினைவு நாளையொட்டி காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு தனது ஆதரவாளர்களுடன் நினைவு மண்டபத்துக்கு சனிக்கிழமை சென்று மரியாதை செலுத்திவிட்டு கார்களில் காங்கயம் திரும்பினார்.
இந்த நிலையில், கொங்கு மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேலப்பாளையம் செல்வதற்காக காங்கயம் நகரம், முத்தூர் சாலைப் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதி வழியாக சென்ற தனியரசு ஆதரவாளர்களுக்கும், ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் தனது தரப்பினரின் 5 கார்களை தனியரசு ஆதரவாளர்கள் கட்டைகளால் அடித்து நொறுக்கி சேதப்படித்தியதாக ஆறுமுகம் தெரிவித்தார். இதையடுத்து, ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, சம்பவம் இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கோவை-கரூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.