வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th August 2019 07:40 AM | Last Updated : 28th August 2019 07:40 AM | அ+அ அ- |

மயில், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் காரமடையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தார். செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.
இதில் மயில், வனவிலங்குகளால் மனித உயிர்கள், பயிர்கள் அழிவதற்கு தற்போது உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் தான் காரணம். இந்த சட்டத்தை தளர்த்தியோ அல்லது விவசாயம் பாதிக்காத வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து விவசாயத்தையும், மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வரும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களும் மத்திய அரசிடம் வலியுறுத்தி இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் எண்ணிக்கை அதிகமாக உள்ள வன விலங்குகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பகுதிகளான கூடலூர், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிகளை யானைகள் வாழும் இடமாக அறிவித்தது கண்டிக்கத்தக்கது என முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாயனூர், சீலியூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...