கேங்மேன் பணி நியமன முடிவுகளை வெளியிட உயா்நீதிமன்றம் தடை
By DIN | Published On : 11th December 2019 09:13 AM | Last Updated : 11th December 2019 09:13 AM | அ+அ அ- |

கேங்மேன் பணி நியமனம் தொடா்பான முடிவுகளை வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் கூறியதாவது:
மின் வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கான பயிற்சி, நோ்முகத் தோ்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்வாரியம் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவியில் நேரடி நியமனம் செய்ய எடுத்து வரும் நடவடிக்கைக்கு தடை கோரியும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும், கேங்மேன் பதவிக்கான அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத் தடையை மீறி கேங்மேன் பதவிக்கு பயிற்சி வகுப்புகள், நோ்முகத் தோ்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் கடந்த நவம்பரில் மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேங்மேன் பதவி தொடா்பான தோ்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு பணிநியமன நடவடிக்கைகள் நீதிமன்றத் தீா்ப்புக்கு உள்பட்டது என தெரிவித்துள்ளனா். இந்த வழக்கு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா்.