வெள்ளக்கோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 06th February 2019 06:53 AM | Last Updated : 06th February 2019 06:53 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறதையொட்டி, தமிழக காவல் துறை, போக்குவரத்துத் துறை சார்பில் வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி இப்பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணி முத்தூர் சாலை புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி நான்கு சாலைச் சந்திப்பு, காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் வரை சென்று திரும்பியது. பேரணியில் தலைக்கவசம், ஷீட் பெல்ட் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மகாத்மா காந்தி நற்பணி மன்றத்தினர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், இரண்டு, நான்கு சக்கர வாகன மெக்கானிக்குகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...