உயர் மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்: வி.கள்ளிப்பாளையத்தில் நாளை தொடக்கம்
By DIN | Published On : 12th February 2019 06:31 AM | Last Updated : 12th February 2019 06:31 AM | அ+அ அ- |

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் புதன்கிழமை (பிப்ரவரி 13) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியன சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரங்கள் பாதை அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14 நாள்கள் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 20 விவசாயிகள் 8 நாள்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக உயர் மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்க கூட்டம் ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் 13 மாவட்ட விவசாயிகள் இணைந்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர். இப்போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவக்கி வைக்கவுள்ளார் என்று வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி தெரிவித்தார்.