சேவூர் அருகே தண்ணீர்பந்தல்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத் துறையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே வையாபுரிக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த நடராஜ் மகன் கணேசமூர்த்தி (31). இவர், போத்தம்பாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் வடுகன்காடு தோட்டத்தில் தங்கி, விவசாயத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் இயற்கை உபாதையைக் கழிக்க, அருகில் உள்ள மனக்காடு தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுள்ள கிணற்றில் கணேசமூர்த்தி தவறி விழுந்துள்ளார். தகவலறிந்து அவிநாசி தீயணைப்புத் துறையினர், சேவூர் காவல் துறையினர் கணேசமூர்த்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி ஆகியும் கணேசமூர்த்தியின் உடல் கிடைக்காததால் மீட்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இரவு முழுவதும் கிணற்றில் இருந்த நீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. அப்போது கணேசனின் உடல் கண்டெடுக்கப்பட்டு அவிநாசி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.