ஆசிரியர்கள் பற்றாக்குறை: காரப்பாளையம் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
By DIN | Published On : 12th February 2019 06:32 AM | Last Updated : 12th February 2019 06:32 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
காங்கயம் தாலுகா, குண்டடம் ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காரப்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 106 மாணவ, மாணவிகள் படித்து வருகினற்னர். இப்பள்ளியில் ஆங்கில மீடியம் உள்ளதால், இதனைச் சுற்றியுள்ள காடையூர், வடசின்னாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கற்பித்தல் தொடர்பாக இந்தப் பள்ளிக்கு பெற்றோர் மத்தியில் நல்ல பெயர் இருந்தாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக கற்பித்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இங்கு இரண்டு ஆசிரியைகள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது, மாணவர்களின் நலனைக் கருதி இப்பள்ளிக்கு மேலும் 3 ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் கோரிக்கையை குண்டடம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
இந்தப் பள்ளியில் நன்றாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரிந்துதான் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு வேனுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைக்கிறோம். ஆனால் இங்குள்ள 2 ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்த முடியவில்லை. இங்கு இருக்கும் ஒரே கட்டடமும் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கவும், கூடுதல் கட்டடம் கட்டித் தரவும் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காங்கயம் வட்டாட்சியர் எஸ்.மகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடமும், பள்ளிக்கு வெளியே இருந்த அவர்களது பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இப்பள்ளிக்கு மேலும் 3 ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையில் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டடம் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து காரப்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறைந்த மாணவர்களோடு இயங்கிக் கொண்டிருக்கும் 2 பள்ளிகளில் இருந்து தலா ஒரு ஆசிரியரை இந்தப் பள்ளிக்கு உடனடியாக மாற்றுவதற்கு காங்கயம் வட்டாட்சியர் எஸ்.மகேஸ்வரன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...