"சின்னத்தம்பி'யை வனத்துக்குள் அனுப்பும் முயற்சி தோல்வி

உடுமலை அருகே அமராவதி ஆற்றுப் படுகையில் கடந்த 10 நாள்களாக முகாமிட்டுள்ள "சின்னத்தம்பி' யானையை

உடுமலை அருகே அமராவதி ஆற்றுப் படுகையில் கடந்த 10 நாள்களாக முகாமிட்டுள்ள "சின்னத்தம்பி' யானையை வனப் பகுதிக்குள் அனுப்பும் முயற்சி தோல்வி அடைந்து வருகிறது. இதற்கிடையில் பயிர்கள் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை அருகே உள்ள சின்னத்தடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட "சின்னத்தம்பி' டாப்சிலிப்பில் ஜனவரி 25-ஆம் தேதி விடப்பட்டது.
ஆனால் அங்கிருந்து உடுமலை வட்டத்துக்குள் பிப்ரவரி 1-ஆம் தேதி நுழைந்தது. தற்போது, அமராவதி ஆற்றுப் படுகையில் உள்ள கிராமங்களான கிருஷ்ணாபுரம், செங்கழனிப்புதூர், கண்ணாடிப்புத்தூர் ஆகிய கிராமங்களில் கடந்த 4 நாள்களாக முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், பட்டாசுகள் வெடித்தும், கும்கி யானைகளான கலீம், மாரியப்பன் ஆகியவற்றை வைத்தும் "சின்னத்தம்பி'யை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த "சின்னத்தம்பி' அங்குள்ள 15 வயதுடைய 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் சாய்த்து தேங்காய்களை சுவைத்தது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த கரும்பு, நெல், வாழை என அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு மதியம் ஓய்வெடுத்தது. பின்னர், மாலை 4 மணிக்கு வழக்கம்போல அங்குள்ள வயல்வெளிகளில் உலவி வந்தது. அப்போது அந்தப் பகுதியில் குவிந்திருந்த பொதுமக்கள் "சின்னத்தம்பி'யைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதற்கேற்ப "சின்னத்தம்பி'யை என்ன செய்வது என்பது குறித்து வனத் துறையினர் முடிவு செய்ய உள்ளனர்.
வனத் துறையினர் உறுதி: பயிர்களை "சின்னத்தம்பி' சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, வனத் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என வனத் துறையினர் உறுதி கூறி வருகின்றனர்.
சுற்றுலாத் தலமான கண்ணாடிப்புத்தூர்: அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் முகாமிட்டுள்ள "சின்னத்தம்பி'யைப் பார்க்க சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் குவிந்து வருகின்றனர்.
இதனால், கண்ணாடிப்புத்தூரில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் ஏராளமான தற்காலிக கடைகள் தோன்றியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com