காங்கயத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி
By DIN | Published On : 04th January 2019 07:29 AM | Last Updated : 04th January 2019 07:29 AM | அ+அ அ- |

காங்கயம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்வோர், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா உத்தரவுப்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் காங்கயம் நகரத்தில் உள்ள கரூர் சாலை, தாராபுரம் சாலை, பிரதான சாலை, தினசரி சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மளிகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தேநீர்க் குவளைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை அளவிலான பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பொருள்களை வைத்திருந்த குற்றத்திற்காக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.