சபரிமலை விவகாரம்: திருப்பூரில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 07:28 AM | Last Updated : 04th January 2019 07:28 AM | அ+அ அ- |

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்த கேரள அரசை கலைக்கக் கோரி இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி முன்பாக இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அப்போது, கேரள மாநிலம், சபரிமலையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் புதன்கிழமை அதிகாலை கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். கேரள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றால் அம்மாநில அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர்கள் கிஷோர் குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல பாஜக சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்வேல், துணைத் தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ளக்கோவிலில்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடைவீதி நான்கு சாலை சந்திப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி கோவை கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் நகரத் தலைவர் கோபிநாத், ஒன்றியத் தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர். ஆகம விதிகளுக்குப் புறம்பாக சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கேரள அரசுக்கு எதிராகவும் இந்து முன்னணித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.