சிவன்மலை தைப்பூச தேர்த் திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
By DIN | Published On : 04th January 2019 07:26 AM | Last Updated : 04th January 2019 07:26 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள தைப்பூச தேர்த் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழா வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் காங்கயம், திருப்பூர், தாராபுரம், வெள்ளகோவில், குண்டடம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை பல்வேறு துறையினர் செய்து வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோயில் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேரோட்டம் நடைபெறும் நாள்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடுதல் பணியாள்களை நியமிப்பது, பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது, தேவையான இடங்களில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்துவது, மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தேரோடும் பாதையில் தற்காலிகக் கடைகளை அமைப்பதைத் தவிர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சிவன்மலை கோயில் உதவி ஆணையர் எம்.கண்ணதாசன், காவல் துறை, தீயணைப்பு, சுகாதாரம், மின் வாரியம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சி துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...