திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 11 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:26 AM | Last Updated : 04th January 2019 07:26 AM | அ+அ அ- |

சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டித்து திருப்பூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 11 பேரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்து. இதன்படி வியாழக்கிழமை காலை நடைபெற்ற போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் கே.பாலாஜி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறுகையில், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மரபுகளை மீறி இரு பெண்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். ஆகவே இந்த இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்து விரோத, தேசிய விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து, ரயில் மறியலுக்கு முயன்ற 6 பெண்கள் உள்பட 11 பேரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக ரயில் நிலையம் முன் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.