பெருமாம்பாளையத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
By DIN | Published On : 04th January 2019 07:29 AM | Last Updated : 04th January 2019 07:29 AM | அ+அ அ- |

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெருமாம்பாளையத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெருமாம்பாளையத்தில் விவசாய நிலத்தில் புதியதாக மதுக்கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பகுதியில் புகழ்பெற்ற வேலாயுதசாமி கோயில் உள்ளது. மேலும், மதுக்கடை அமையவுள்ள இடத்தின் அருகில் அருந்ததியர் காலனி மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.
ஆகவே இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறாக அமையும். ஏற்கெனவே சாமளாபுரம் பேரூராட்சியில் மதுக்கடை திறக்க மாட்டோம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பெருமாம்பாளையத்தில் மதுக்கடை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.