பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. ஆயிரம் ரொக்கத்துடன்,   ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்களைக் கொண்ட  பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. 
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தின் துவக்க விழா உடுமலை  நகராட் சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பு விநியோகத்தைத் துவக்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 877 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலா ரூ.126.50 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட  உள்ளது. இதற்காக ரூ. 9.27  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பரிசாக  வழங்கப்பட  உள்ளது. இதற்காக ரூ. 73. 49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
மேலும், மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 81 ஆயிரத்து 402 குடும்பங்களுக்கு ரூ. 13.19 கோடி மதிப்பீட்டில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன. ஆக மொத்தம் இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 96 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், உடுமலை  கோட்டாட்சியர் எஸ்.அசோகன், திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவர் கே.மனோகரன், துறைஅதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 
பல்லடம் வட்டத்தில்...
பல்லடம் வட்டத்தில் 70ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லடம் வட்டத்தில் 50ஆயிரத்து178 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள்,  70ஆயிரத்து 838 குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ. 126.55 மதிப்புள்ள பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ. ஆயிரம் ரொக்கம் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி, உப்பிலிபாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் நடந்த விழாவுக்கு பல்லடம் வட்டாட்சியர் அருணா தலைமை வகித்தார். பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி,சேலை, ரொக்கம் ரூ. ஆயிரம் ஆகியவற்றின் விநியோகத்தை  பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார்.  
திருப்பூரில்...
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைக்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை  சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். வட்டாட்சியர் ஜெயகுமார், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட சி.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைசட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். வட்டாட்சியர் சேகர், அதிமுக நிர்வாகிகள் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com