உடுமலையில் இரு தரப்பினரிடையே மோதல்: போலீஸார் லேசான தடியடி
By DIN | Published On : 09th June 2019 02:57 AM | Last Updated : 09th June 2019 02:57 AM | அ+அ அ- |

உடுமலையில் காவல் நிலையம் முன்பு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இது குறித்த விவரம்:
உடுமலை நகரில் உள்ள சத்திரம் வீதி, வ.உ.சி. வீதியில் ஒரு மதத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அவர்கள் சார்ந்த மதம் தொடர்பான புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் அந்தப் பெண்களிடம் இருந்த புத்தகங்களைப் பறித்தனராம். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அந்த வீதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு, வாகனங்கள் தேங்கி நின்றன. பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
தகவல் கிடைத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீஸார் போக்குவரத்தை சீர் செய்தனர். மதம் சார்ந்த புத்தகங்களை விநியோகித்த 3 பெண்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்த தகவல் பரவியதும் இரு தரப்பைச் சேர்ந்த ஏராளமானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு, இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த ஒருவர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, போலீஸார் இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தினர். ஆனாலும், அனைவரும் கலைந்துபோக சம்மதிக்காமல் மீண்டும் அதே இடத்தில் கூடினர். இருதரப்பினரிடமும் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பிலும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 25ஆம் தேதி உடுமலையில் மதம் சார்ந்த புத்தகங்களை விநியோகித்தபோது இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அப்போது, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் சுமுகத் தீர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் மீண்டும் இப்பிரச்னை தலையெடுத்துள்ளது.