கிணற்றில் கார் விழுந்து 5 பேர் காயம்
By DIN | Published On : 09th June 2019 02:56 AM | Last Updated : 09th June 2019 02:56 AM | அ+அ அ- |

பல்லடத்தை அடுத்த கோயில்பாளையத்தில் சாலையோர கிணற்றில் கார் விழுந்ததில் 5 பேர் சனிக்கிழமை காயம் அடைந்தனர்.
திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சென்றாயன் (37). இவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி கவிதா (31), தங்கை சுதா (30) அவரது மகன்கள் ரிதீஷ் (6), தர்ஷன் (2) ஆகியோருடன் வத்தலக்குண்டில் உள்ள உறவினர் இல்லத் திருமணத்துக்குச் சென்று விட்டு திருப்பூருக்கு காரில் சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூர் - தாராபுரம் சாலையில் கோயில்பாளையம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில் விழுந்தது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக அவிநாசிபாளையம் போலீஸார், பல்லடம், திருப்பூர் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கிரேன் உதவியுடன் அனைவரையும் மீட்டனர். இதில் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.