பல்லடம் நகராட்சியில் உரக்கிடங்கு அமைப்பதில் சிக்கல்
By DIN | Published On : 09th June 2019 02:56 AM | Last Updated : 09th June 2019 02:56 AM | அ+அ அ- |

பல்லடம் நகராட்சியில் உரக்கிடங்கு அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளதால் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்லடம் - தாராபுரம் சாலையில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 9.60 ஏக்கர் நிலத்தில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. அந்த இடம் தங்களது பூர்வீக இடம் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் திருப்பூர் மாவட்ட நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சார இணைப்பு பெற்று சுற்றுப்புற கம்பி வேலி மற்றும் கூரை அமைக்கப்பட்டு துரித வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் திருப்பூர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு இருப்பதால் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உரக்கிடங்கு முன்பு பொது அறிவிப்புப் பலகை வைத்தனர். அதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றத்தை பல்லடம் நகராட்சி நிர்வாகம் அனுகியுள்ளது. உரக்கிடங்கு இடப்பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்து அது செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று பல்லடம் நகர் வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.