உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, காங்கயத்தில் வருவாய்த் தீர்வாயம்

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை துவங்கியது.

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை துவங்கியது.
உடுமலை வட்டம்: உடுமலை வட்டத்துக்கான வருவாய்த் தீர்வாயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சாகுல் ஹமீது தலை மையில் துவங்கியது. முதல் நாளில் உடுமலை உள்வட்டத்துக்கு உள்பட்ட சின்ன வீரம்பட்டி, குறுஞ்சேரி, அந்தியூர், வெனசுப்பட்டி, கணபதிபாளையம், உடுமலைப்பேட்டை, பெரிய கோட்டை, கணக்கம்பாளையம் ஆகிய கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 196 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலை ஒட்டி 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு ஜமாபந்தி அலுவலரிடம் மனு கொடுத்தனர். 
வட்டாட்சியர் தங்கவேலு, தனி வட்டாட்சியர்கள் கி.தயானந்தன், கிருஷ்ணவேணி,  துணை வட்டாட்சியர் பொன்ராஜ், துறை வாரியான அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் வட்டம்: மடத்துக்குளம் வட்டத்துக்கான வருவாய்த் தீர்வாயம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் தலைமையில் நடைபெற்றது. முதல் நாளில் மடத்துக்குளம் உள்வட்டத்துக்கு உள்பட்ட சங்கராமல்லூர் தெற்கு, கொழுமம், சோழமாதேவி, சங்கராமல்லூர் வடக்கு, பாப்பான்குளம், கொமரலிங்கம் மேற்கு, கொமரலிங்கம் கிழக்கு, வேடபட்டி, சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், அக்ரஹாரம் கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இக் கிராமங்களுக்கு உள்பட்ட மக்கள் 335 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். வட்டாட்சியர் பழனியம்மாள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.  
அவிநாசி வட்டம்: அவிநாசி வட்டாட்சியர் அலுவலக்த்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மக்களிடமிருந்து 235 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13 முதல் 19ஆம் தேதி வரை வருவாய்த் தீர்வாய நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்நாள் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்துக்கு திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் முன்னிலை வகித்தார்.  
வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் சேவூர் உள்வட்டத்தைச் சேர்ந்த பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசுவலையபாளையம், குட்டகம், புலிப்பார், தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், வடுகபாளையம், பாப்பாங்குளம், சேவூர், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம்பாளையம், கானூர் ஆகிய 14  கிராமங்களைச் சேர்ந்த  மக்களிடம் இருந்து 235 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான 6 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. இதில்  வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள்,   பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 
காங்கயம் வட்டம்: காங்கயம் வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் வியாழக்கிழமை துவங்கியது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 374 மனுக்கள் பெறப்பட்டன. காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் துவங்கிய இந்த முகாமில் காங்கயம் வருவாய் உள்வட்டத்தைச்  சேர்ந்த கிராம மக்கள்  தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இதில் காங்கயம் உள்வட்டத்தைச் சேர்ந்த கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் ஆகிய பகுதி மக்கள் மொத்தம் 374 கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.
அவற்றில் தகுதியான 5 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை, ஒரு பயனாளிக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு வாரிசுச் சான்றிதழ் ஆணை ஆகியவற்றை உடனடியாக  மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக மேற்கண்ட 10 கிராமங்களுக்கான நில அளவைக் கருவிகளையும் மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார்.
காங்கயம் வட்டாட்சியர் விவேகானந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். ஊதியூர் உள்வட்டதைச் சேர்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்பந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூர், முதலிபாளையம் ஆகிய பகுதி வருவாய்க் கிராமங்களுக்கு வருவாய்த் தீர்வாயம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com