முகநூல், செல்லிடப்பேசியில் நேரத்தைச் செலவிடாதீர்கள்: மாநகர காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் 

முகநூல், செல்லிடப்பேசிகளில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை ஏமாற்றக்கூடாது என்று கல்லூரி

முகநூல், செல்லிடப்பேசிகளில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை ஏமாற்றக்கூடாது என்று கல்லூரி மாணவியருக்கு திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.பிரபாகரன் அறிவுறுத்தினார். 
திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள குமரன் மகளிர் கல்லூரி, சர்வதேச நீதிப்பணி மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில் மனித கடத்தலுக்கு எதிரான மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிரபாகரன் பேசியதாவது: குழந்தைகளையும், பெண்களையும் விருப்பமின்றி அழைத்துச் செல்வது, கொத்தடிமையாக நடத்துவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, வீட்டு வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்துவது பல இடங்களில் நடந்து வருகின்றன. ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக அவர்களைக் கட்டாயப்படுத்தினால் அது கடத்தல்தான். இதுபோன்ற செயல்களை ஒரு தனிநபர் மட்டும் செய்ய முடியாது. ஒரு கும்பல் ஒருங்கிணைந்து செய்வர். வெளிநாட்டுக்குச் சென்றால் வேலை கிடைக்கும் என்று பொய் சொல்லி பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் சிக்க வைத்துவிடுவர். இதுபோன்று பாதிப்புக்குள்ளாவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
இன்றைய காலத்தில் பலரும் முகநூல் மற்றும் செல்லிடப்பேசிகளில் நேரத்தைச் செலவிட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். முகநூல் மூலம் அறிமுகம் ஆகும் நபர் யார்? என்ன படித்துள்ளார்? என்ன தொழில் செய்கிறார்? அவர் எப்படிப்பட்டவர் என தெரியாமலேயே காதலித்து ஏமாந்து போகின்றனர். நான் சொல்லிய அனைத்தும் சமூகத்தில் நடந்து வரும் சம்பவங்கள் தான். ஆகவே, முகநூல் மற்றும் செல்லிடப்பேசிகளில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை ஏமாற்றக்கூடாது என்றார். 
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப், சர்வதேச நீதிப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாலமன் ஆண்டனி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கந்தசாமி பிரபு, விழுதுகள் அமைப்பின் இயக்குநர் தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com