வெள்ளக்கோவில் ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயில் தேர்த் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 06th March 2019 09:24 AM | Last Updated : 06th March 2019 09:24 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலின் 136ஆவது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை துவங்கியது.
மூன்று நாள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளில் தேர் நிலைபெயர்த்து வைக்கப்பட்டது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். கோயில் குலத்தவர்கள், பக்தர்கள் வடம் பிடித்து தேரை நிலைபெயர்த்தனர். மார்ச் 6ஆம் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெற்று, மூன்றாம் நாளான வியாழக்கிழமை தேர் நிலை சேர்க்கப்படுகிறது. தேர்த் திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 500க்கும் அதிகமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்த் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், முன்னாள் அறங்காவலர் வி.ஜி.ராமசாமி, இந்து சமய அறநிலையத் துறை கோவை உதவி செயற்பொறியாளர் எம்.பிரேம்குமார், கோயில் செயல் அலுவலர் மு.ரத்தினாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.