அதிநவீன மின்னணு வாகனத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 22nd March 2019 07:36 AM | Last Updated : 22nd March 2019 07:36 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
மக்களவத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்ததை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அதிநவீன மின்னனு விளம்பர வாகனத்தின் மூலம், குறும்படங்களை திரையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது என்றார். அதையடுத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தையும், திருப்பூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரப் பேரணியையும் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...