தனியார் சாய ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
By DIN | Published On : 22nd March 2019 07:33 AM | Last Updated : 22nd March 2019 07:33 AM | அ+அ அ- |

பல்லடம், அருள்புரம் தனியார் சாய ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால், ஆலையை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த ஆலையில் இருந்து சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குழாய் மூலம் ஆலை வளாகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் குழி வெட்டி, அதில் விட்டுள்ளனர். அதனால் சுற்றிலும் மக்கள் குடியிருக்கும் வசிப்பிடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் வண்ண நிறங்களில் தண்ணீர் வந்துள்ளது.
அவற்றை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் 40-க்கும் மேற்பட்டோர், சம்பந்தப்பட்ட தனியார் சாய ஆலையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் வினோத்குமார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், உடனடியாக சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சாய ஆலை நிர்வாகத்தினர் கூறியது:
அரசின் சட்டத்திட்டத்துக்கு உள்பட்டுதான் ஆலை இயங்கி வருகிறது. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது நிறுவனத்தை நேரில் அனுமதி பெற்று பார்வையிடலாம். பாதிப்படைந்த மக்களுக்கு, தங்களது நிறுவனத்தின் மூலம் சேவைப் பணியாக ஒரு பொது தண்ணீர் குழாய் அமைத்து, நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...