அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அவிநாசியில் புதன்கிழமை பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்குதான். விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு மௌனம் காக்கிறது. இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பணமதிப்பிழப்பை அமல்படுத்தி, ஏடிஎம் வாசலில் மக்களை காக்கவைத்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் சாவுக்கு காரணமான மோடி அரசு இனி தேவையா? எனவே, நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
உடுமலையில்: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து உடுமலை, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பெதப்பம்பட்டி, மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது, மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.