சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் பேசியதாவது:
நாட்டின் அடுத்த பிரதமராக மோடி தான் மீண்டும் வருவார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நாங்கள் நிச்சயம் பெற்று தருவோம். மத்திய பாஜக ஆட்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணமதிப்பிழப்பால் பாதிப்பு என குற்றம்சாட்டுகின்றனர்.
அதை தவிர வேறு ஏதாவது ஒரு ஊழல் பற்றி சொல்ல முடியுமா? தூய்மையான நல்லாட்சியை மோடி அளித்துள்ளார். அதனால் தான் அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
பல்லடம் பகுதியில் நெசவு தொழில் பாதுகாக்கப்படும். சுதந்திரம் வாங்கியது முதல் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் நாடு முன்னேற்றம் அடையவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பல்வேறு துறையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.
சிறு, குறு தொழில் துறையினர் பாதிக்கா வண்ணம் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அர்ஜுன்சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூரில்: ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான வெங்கு மணிமாறனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசியதாவது:
அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் திருப்பூர் முதல் பல்லடம் வரையில் நாற்கர சாலைத் திட்டத்தை செயல்படுத்துவோம். சூரியநல்லூரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் எதிர் எதிராக செயல்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் நகமும் சதையுமாக கூட்டணி அமைத்துள்ளனர்.
நம் நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றவுடன் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் தயங்காதவர் பிரதமர் மோடி. அவர் 84 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றார் என்று மட்டுமே சொல்கிறார்கள். ஆனால், அந்த நாடுகளுடன் அவர் நட்புறவை வலுப்படுத்தியதை சொல்ல மறுக்கின்றனர். வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.
இப்பிரசாரத்தின்போது, தேமுதிக திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஷ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.