பல்லடத்தில் மார்ச் 30 இல் விசைத்தறி கடன் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 28th March 2019 09:24 AM | Last Updated : 28th March 2019 09:24 AM | அ+அ அ- |

விசைத்தறி தொழில் நசிவு, வங்கிக் கடன் பிரச்னை குறித்து ஆலோசிக்க, பல்லடத்தில் விசைத்தறி கடன் சங்கக் கூட்டம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கூறியதாவது:
2014 ஆம் ஆண்டு ஒப்பந்த கூலி கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, விசைத்தறிகளுக்காக பெற்ற மூலதன கடன்களை அடைக்க முடியாமல் வங்கி வட்டியும் பல மடங்கு அதிகரித்தது.
விசைத்தறியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள விசைத்தறிகளையும், விவசாய நிலங்களையும் வங்கி ஏலத்தில் இழக்கும் நிலையில் உள்ளனர். தற்போது வங்கிகள் விசைத்தறியாளர்களுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்கின்றன. இதுவரை பல கட்ட முயற்சிகள் செய்தும் அரசிடம் வைத்த கோரிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் விசைத்தறியாளர்கள் உள்ளனர்.
மேலும் இவ்விவகாரத்தில் வங்கி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளோம். இப்பிரச்சனை குறித்து ஆலோசிக்க மார்ச் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பல்லடம் மணிவேல் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் விசைத்தறியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...