அரசுப் பள்ளி அருகே திறந்தவெளிக் கிணறு: பாதுகாப்பு வலை அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 03:40 AM | Last Updated : 05th May 2019 03:40 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே அரசுப் பள்ளிக்கு அருகில் இருக்கும் திறந்தவெளிக் கிணறுக்கு பாதுகாப்பு கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயத்தை அடுத்த அவிநாசிபாளையம்புதூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு எதிரே பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறு உள்ளது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உயரம் குறைவான இந்த கிணற்றின் சுற்றுச் சுவரில் பாதுகாப்பு வலை எதுவும் இல்லாமல் உள்ளது.
அரசுப் பள்ளிக்கு அருகில் இந்தக் கிணறு இருப்பதால் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கிணற்றுக்கு அருகே விளையாடுவதும், கிணற்றை எட்டிப் பார்ப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நேரங்களில் கிணற்றை எட்டிப் பார்க்கும் சிறுவர்கள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி, இந்தத் திறந்தவெளிக் கிணற்றின் மேற்பகுதியில் கம்பி வலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...