ஆபாசப் படங்களை வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
By DIN | Published On : 05th May 2019 03:40 AM | Last Updated : 05th May 2019 03:40 AM | அ+அ அ- |

திருப்பூர் அருகே, தன்னை திருமணம் செய்துகொள்ளாôவிட்டால் புகைப்படத்தை ஆபாசப் படமாக மாற்றி இணையதளத்தில் வெளியிடுவேன் என்று இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபாளையம் அருகே சக்திநாராயணன் (32) என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரது நடவடிக்கை பிடிக்காததால் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார். ஆனால் அதன் பிறகும் சத்திநாராயணன் அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசிக்குத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தன்னை திருமணம் செய்யாவிட்டால் அவரது புகைப்படத்தை ஆபாசப் படமாக மாற்றி இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சக்திநாராயணனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பெண்ணை சக்தி நாராயணன் ஒரு தலையாகக் காதலித்து வந்ததும், இது தெரிந்தும் அந்தப் பெண் வேலையில் இருந்து நின்று விட்டதும், இதனால் ஆத்திரமடைந்த சக்திநாராயணன் அந்தப் பெண்ணை மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...