சோழீஸ்வர சுவாமி கோயிலில் வருண பூஜை
By DIN | Published On : 05th May 2019 03:40 AM | Last Updated : 05th May 2019 03:40 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் உள்ளதெய்வநாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி கோயிலில் மழை வேண்டி வெள்ளிக்கிழமை வருண பூஜை நடத்தப்பட்டது.
இப்பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயம், கால்நடை தீவன உற்பத்திக்குத் தண்ணீர் போதவில்லை. பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. குடி தண்ணீருக்கே திண்டாடும் நிலையில், விவசாயம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்நிலையில் மழை வேண்டி கோயிலில் நடந்த வழிபாட்டில் ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, வெட்டிவேர், பன்னீர், பச்சைக் கற்பூரம், இதர நறுமணப் பொருள்கள் கலந்து பாத்திரத்தில் இருக்கும் நீர் சொட்டுச் சொட்டாக சுவாமி மீது விழும்படி செய்யப்பட்டது. இவ்வாறு 25 நாள்கள் பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகிகள் கூறினர். இதேபோல இப்பகுதியில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயிலிலும் சனிக்கிழமை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.