நல்லூர் பகுதியில் 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோயில் திருவிழா
By DIN | Published On : 05th May 2019 03:41 AM | Last Updated : 05th May 2019 03:41 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த நல்லூர் பகுதியில் 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோயில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மன், செல்லாண்டியம்மன் கோயில்களில் நல்லூர், விஜயாபுரம், ராக்கியாபாளையம், கணபதிபாளையம், காசிபாளையம், மணியகாரம்பாளையம், பள்ளக்காட்டுப்புதூர், அத்திமரத்துப்புதூர் ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, நிகழாண்டும் இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கோயில் விழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன் தங்கள் வீடுகளில் முளைப்பாரி போடுதல், காப்பு கட்டி, இரவு பொட்டுசாமி பொங்கல், பொரி மாற்றுதல், பூச்சாட்டு, தெப்பக்குளத்தில் இருந்து கும்பம் எடுத்துவந்து மாரியம்மன் கோயிலில் கம்பம் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, நல்லூர் ஈஸ்வரன் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் 346 பால், பன்னீர், தீர்த்தகுடம், எடுத்து நல்லூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கை, மேளதாளத்துடன் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கிழமை வழிபட்டனர்.
மே 7 ஆம் தேதி மாகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல், தீர்த்தக் கும்பம் எடுத்து வருதல், 8 ஆம் தேதி காலை சிறப்பு அலங்கார பூஜை, பிற்பகலில் உச்சி கால பூஜை, மாலை 8 ஊர்களில் இருந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதையடுத்து, 9ஆம் தேதி அதிகாலை ஊர் பொங்கல் வைத்தல், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...