மின்வாரிய இணையதள சேவை முடக்கம்: புதிய மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதி
By DIN | Published On : 05th May 2019 03:39 AM | Last Updated : 05th May 2019 03:39 AM | அ+அ அ- |

திருப்பூரில் மின்வாரிய இணையதள சேவை முடக்கத்தால் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கச் செயலாளர் அ.சரவணன் கூறியதாவது:
மின்வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பித்து புதிய மின் இணைப்பை விரைவாகப் பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக லஞ்சம் பெறுவது தவிர்க்கப்படுவதுடன், காலதாமதமும் தவிர்க்கப்படுகிறது.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் கடந்த 20 நாள்களாக மின் இளையதள சேவையில் (சர்வர்) குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புதியதாக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்தவர்களுக்கு சாதகமாக செயல்படுவதுடன், விண்ணப்பதாரர்களை நீங்கள் ஏன் இணையதளம் மூலம் பதிவு செய்தீர்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மின் இளையதள சேவை குறைபாட்டை சீரமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.