வாகன சோதனையில் ரூ.2.60 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 05th May 2019 03:41 AM | Last Updated : 05th May 2019 03:41 AM | அ+அ அ- |

பல்லடம், சித்தம்பலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 16 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்லடம் - உடுமலை சாலையில் சித்தம்பலம் பிரிவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது நம்பியூர் கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நூற்பாலை உரிமையாளர் சரவணன் (48) ரூ.2.60 லட்சம் கொண்டு செல்வது தெரிந்தது. ஆனால் அதற்குரிய வங்கி ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்து பல்லடம் தேர்தல் துணை வட்டாட்சியர் மயில்சாமியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.