வாரச்சந்தையில் ஏலம் முடிந்தும் சுங்கம் வசூலிப்பதாக மக்கள் புகார்
By DIN | Published On : 05th May 2019 03:38 AM | Last Updated : 05th May 2019 03:38 AM | அ+அ அ- |

கருவலூர் வாரச்சந்தை ஏல தேதி முடிந்தும் ஏலதாரரே சுங்க வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கருவலூர் மாரியம்மன் கோயில் பின்புறம் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் கருவலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளும், வியாபாரிகளும் தங்கள் பொருள்களை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தச் சந்தையில் ஏலம் எடுத்தவரின் காலம் முடிவடிந்தும், பழைய ஏலதாரரே மீண்டும் சுங்கம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
இந்தாண்டு ஏல நிறைவு ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. தேர்தல் காரணமாக இந்தாண்டு ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் பழைய ஏலதாரரே தொடர்ந்து வசூல் செய்து வருகிறார். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இந்தாண்டுக்கான ஏலம் நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஆட்சியரிடம் முறையிடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியது: பழைய ஏலதாரர் மீண்டும் 2 மாதங்கள் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அவ்வாறு வசூல் செய்து கொள்ள அரசாணை உள்ளது என்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...