வட்டமலை அருகே விபத்தைத் தவிர்க்க சாலையோரத்தில் தடுப்புகள் அமைப்பு
By DIN | Published On : 15th May 2019 09:08 AM | Last Updated : 15th May 2019 09:43 AM | அ+அ அ- |

வட்டமலை அருகே சாலை வளைவில் தடுப்பு அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் - தாராபுரம் செல்லும் சாலையில் வட்டமலை அருகே அபாயகரமான நிலையில் சாலை வளைவு உள்ளது. இது ஈரோடு - பழனி வழித்தடமாக இருப்பதால் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. பழனி முருகன் கோயில் திருவிழா காலங்களில் சேலம், ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட இந்த அபாயகர சாலை வளைவை ஒட்டி பள்ளம் இருப்பது தெரியாமல் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதியில் பெரும்பாலான விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, இந்த இடத்தில் சாலையோரம் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்நிலையில் இந்த சாலை வளைவின் ஓரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணி இன்னும் ஓரிரு நாள்களில் முடிந்துவிடும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.