அவிநாசி, சேவூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2019 07:21 AM | Last Updated : 19th May 2019 07:21 AM | அ+அ அ- |

அவிநாசி, சேவூர் பகுதியில் தடை செய்யப்பட்ட 217 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதைப் பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவிநாசி பேரூரரட்சி செயல் அலுவலர் தி.ஈஸ்வரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் வ.கருப்புச்சாமி, சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் அவிநாசி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசியில் சேவூர் சாலை, கோவை பிரதான சாலை, புதிய பேருந்து நிலையம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், தேநீர் கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள், உணவுக் கூடங்கள், மளிகைக் கடைகளில் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 210 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை விற்பனைக்கும், உபயோகத்திற்கும் வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு ரூ. 200 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிப்பட்டது.
சேவூர் ஊராட்சியில்: சேவூர் ஊராட்சிக்கு உள்பட்ட கைகாட்டி பகுதி, கோபி சாலை, புளியம்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள
தேநீர் கடைகள், இறைச்சிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகளில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய குவளைகள் உள்ளிட்டவை 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 4,800 அபராதம் விதிக்கப்பட்டது.