திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
By DIN | Published On : 19th May 2019 07:19 AM | Last Updated : 19th May 2019 07:19 AM | அ+அ அ- |

திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்படவுள்ள எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி காலை 8 மணி அளவில் எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் வாக்குகள் எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாஷியம் (தேர்தல்), கீதாபிரியா (பொது), தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறை, பொதுப் பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.