முத்தூர் விற்பனைக்கூடத்தில் ரூ. 32 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
By DIN | Published On : 19th May 2019 07:24 AM | Last Updated : 19th May 2019 07:24 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 32.54 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.
இந்த வார ஏலத்துக்கு 383 மூட்டை எள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 28,491 கிலோ. இவற்றை வாங்க 125 விவசாயிகள், 9 வணிகர்கள் வந்திருந்தனர். கருப்பு எள் கிலோ ரூ. 94.72 முதல் ரூ.119.79 வரை விற்பனையானது.
சராசரி விலை கிலோ ரூ.108.96. சிவப்பு எள் கிலோ ரூ. 90.99 முதல் ரூ.111.79 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.107.79. இவற்றின் விற்பனைத் தொகை ரூ. 30 லட்சம் ஆகும்.
மேலும், ஏலத்துக்கு 25,680 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றை வாங்க 100 விவசாயிகளும், 8 வியாபாரிகளும் வந்திருந்தனர். கிலோ ரூ.15.35 முதல் ரூ. 23.20 வரை விலைபோனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 978 ஆகும். 930 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. இவற்றை வாங்க 30 விவசாயிகள், 4 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.51.35 முதல் ரூ.85.40 வரை விற்பனையானது. இதன் விற்பனைத் தொகை ரூ.66,325.
விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 32 லட்சத்து 54 ஆயிரம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 39 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை நடைபெற்றது.