2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு பெண் தற்கொலை முயற்சி: மூவரும் உயிர்தப்பினர்
By DIN | Published On : 19th May 2019 07:25 AM | Last Updated : 19th May 2019 07:25 AM | அ+அ அ- |

திருப்பூரில் தனது 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருப்பூரில் அவிநாசி சாலை குமார் நகர் பகுதி சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரதீபா (35). இவர்கள் இருவரும் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், அருண்குமார் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். இந்நிலையில், வீட்டிற்குள் இருந்த பிரதீபாவின் 10 வயது மகன் சப்தம் போட்டுள்ளார். பக்கத்து வீட்டார் அங்கு சென்று பார்த்தபோது பிரதீபா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது மகளும் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.
இது குறித்த விசாரணையில், பிரதீபா தன் இரு குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது 10 வயது மகன் கயிறு அறுந்து விழுந்ததால் கீழே விழுந்து சப்தமிட்டதாகவும் தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற 15 வேலம்பாளையம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிரதீபா வேலை பார்க்கும் இடத்தில் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து இச்சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.