ஓடைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
By DIN | Published On : 26th May 2019 03:00 AM | Last Updated : 26th May 2019 03:00 AM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த குண்டடம் பகுதியில் உள்ள ஓடைப் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை வருவாய்த் துறையினர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் பெல்லம்பட்டி, முத்தையம்பட்டி, சூரியநல்லூர், கெத்தல்ரேவ், நந்தவனம்பாளையம், சடையபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன.
இந்த ஓடைகளில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி உப்பாறுஅணை, வட்டமலைக்கரை, அமராவதி ஆறு ஆகியவற்றில் கலக்கிறது.
வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடைகளை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால் அருகில் இருப்பவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஓடைகள் தற்போது சுருங்கி வாய்க்கால் போல் உள்ளது. ஓடைகளை அரண்போல் காத்து வந்த பனை மரங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இதனால் போதிய அளவு தண்ணீரை சேமிக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஓடைகளை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.