கோவை, திருப்பூர் தொகுதிகளில் வெற்றி: மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி
By DIN | Published On : 26th May 2019 02:59 AM | Last Updated : 26th May 2019 02:59 AM | அ+அ அ- |

கோவை, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினரை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.சுப்பராயனும், கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜனும் போட்டியிட்டனர்.
இந்த இரு வேட்பாளர்களையும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த அனைத்துப் பகுதி மக்களுக்கும், இவர்களது வெற்றிக்காகப் பாடுபட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள், ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக விவசாயம், தொழில், மக்கள் வாழ்வு ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் எவ்வித சமரமும் இன்றி முன்னெடுத்துச் செல்வார்கள். தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பணி அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.