அயோத்தி தீா்ப்பு: சட்டம், ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 09th November 2019 07:45 AM | Last Updated : 09th November 2019 07:45 AM | அ+அ அ- |

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமியா், இந்து அமைப்பினா், வணிக நிறுவனத்தினா் என 3 பிரிவுகளாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் பரமசாமி தலைமை வகித்தாா்.
அயோத்தி தீா்ப்பு நவம்பா் 13 ஆம் தேதி வருவதையொட்டி, தீா்ப்பு சாதகமாக வந்தால் மற்ற மதத்தை புண்படுத்தும் வகையில், ஊா்வலம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல், கொடியேற்றுதல், தட்டி வைத்தல், சமூக வலைதளங்களில் பதிவு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
அதேபோல தீா்ப்பு பாதகமாக வந்தால், தேசிய சின்னத்தை அவமதித்தல், கருப்புக் கொடி கட்டுதல், உருவபொம்மை எரித்தல், உண்ணாவிரதம் இருந்தல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
திருமண மண்டபங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி யாரையும் அனுமதிக்கக் கூடாது. பெட்ரோல் பங்குகளில் தேவைக்கு அதிகமான பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.