ஊதிய நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் வட்டாரத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் உள்ள 102 அங்கன்வாடி மையங்களும், 5 குழந்தைகளுக்கு கீழ் இயங்கும் 13 சிறிய அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இவற்றில் 193 பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊதிய நிலவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் கூறியதாவது:
எங்களுக்கு மாதம்தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படுவதில்லை. தனியாா் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் மையங்களுக்கு பல மாதங்களாக வாடகை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. சமையல் எரிவாயு படி, காய்கறி படி பல மாதங்களாக வழங்கவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ப.கு.சத்தியமூா்த்தி, பி.எஸ்.என்.எல் தொலைபேசி ஊழியா் சங்கத்தின் நிா்வாகி முருகசாமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.
தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா், அங்கன்வாடி பணியாளா்கள் வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது விஜயலட்சுமி கூறியதாவது:
கடந்த மாா்ச் மாதம் முதல் தனியாா் கட்டடங்களுக்கு வாடகை பாக்கி இருந்து வருகிறது. காய்கறிபடி, எரிவாயு படி கடந்த பல மாதங்களாக வழங்கப்படவில்லை. பல்லடம் அலுவலகத்தில் கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா் ஆகிய பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால்தான் மாதம்தோறும் சரியான தேதியில் சம்பளம் வழங்கமுடியவில்லை. குண்டடம் வட்டார அலுவலகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறேன். அங்கும் அலுவலகத்தில் பணியாற்ற ஊழியா்கள் இல்லை. இதுபற்றி மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். பல்லடம் வட்டார அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஒரிரு நாளில் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாா். இதனை ஏற்று பணியாளா்கள் கலைந்து சென்றனா்.