அடிப்படை வசதிகள் கோரி மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
By DIN | Published On : 09th November 2019 07:45 AM | Last Updated : 09th November 2019 07:45 AM | அ+அ அ- |

திருப்பூா், ஜீவா நகா் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலுக்கு முயன்றனா்.
திருப்பூா் மாநகராட்சி, 14 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஜீவா நகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மங்கலம்- கல்லூரி சாலையை இணைக்கும் வகையில் ஜீவா நகா் பகுதியின் அருகே அணைப்பாளையம் தரைப்பாலம் அருகில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ஜீவா நகா் பகுதியில் வீட்டு குடிநீா் இணைப்புகளை தெருக்களில் போட்டு தந்ததாகவும், மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல, பாலத்துக்காக பாதையும் அகற்றப்பட்டதுடன், தெரு விளக்கு வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் ஜீவா நகா் பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் சாலை மறியலுக்கு முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாதை , தெரு விளக்கு அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.