திருப்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு முயற்சிக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு
By DIN | Published On : 01st September 2019 07:14 AM | Last Updated : 01st September 2019 07:14 AM | அ+அ அ- |

திருப்பூருக்கு கூடுதல் ரயில், ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்துவதற்காக மக்களவை உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளது. இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் செ.முத்துக்கண்ணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி வருகின்றனர். மேலும், தொழில், வர்த்தகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் விரிவான ஆலோசனை நடத்தி ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை உருவாக்கியது. இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு, ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக திருப்பூர், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, திருப்பூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் நடத்தும் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்திலும் பங்கேற்று இதை வலியுறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயனும் திருப்பூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு ரயில்வே தொடர்பான மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரமும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவர்களின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்தக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.